தென் இந்திய வரலாறு – புத்தகம் (Notes)

டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தென்னிந்திய வரலாறு’ இரண்டு தொகுதிகளாக 1958-ல் வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் தெற்கின் வரலாறு சரிவர சொல்லப்படாத ஏக்கத்துடன் துவங்குகிறார் ஆசிரியர். 175 பக்கங்கள் கொண்ட இம்முதல் புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளது.

தென்னாட்டின் நில அமைப்பை விந்திய சாத்புரா மலைத்தொடர்கள் இயற்கையாய் பிரிப்பதில் தொடங்கி, அதன் இயற்கை அழகியலை சுருக்கமாக கூறுகிறார். கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இயற்கையாய் நிலங்களை பிரிப்பதுடன், மாறுபட்ட கலாச்சாரங்களும் சிறிய நாடுகளும் உருவாக வைத்தன . மேற்கில் இருந்து கிழக்கில் சரியும் நிலப்பரப்பு மற்றும் அதன் ஆறுகள், பருவநிலை மாற்றங்கள் தென்னாட்டை மாறுபட்ட விளைச்சல் நிலமாகவும் இயற்கை சுரங்கமாகவும் அமைத்துள்ளது. தீபாவடிவமான தென்னாட்டின் வடிவம் இயற்கை துறைமுகங்கள் அமைய தடையாய் இருந்துள்ளது. கடல் சூழ் நிலத்தில் இருந்து மன்னர்கள் அதன் கீழை நாடுகளுக்கு பயணம் செய்யவும், தெற்கில் கடற்படை அமையவும் காரணமாயின.

திண்ணமான வரலாறு என்று உருவாவதற்கு முன்னால் நடந்தைவாக கருதப்படுவதை ஆராய்ச்சிகளை ஒப்பிட்டு விளக்குகிறார். ஆதி மனிதன் தெக்காணத்தில் தோன்றினான, திராவிடர் இங்கிருந்து மேற்கு ஆசியாவிற்கு சென்றனரா அல்லது மொங்கோலியாவில் இருந்து தென்னிந்தியா வந்து சேர்ந்தனரா என்பதையும், உருவ மற்றும் பழக்க வழக்க ஒற்றுமையையும் பல்வேறு இடங்களில் நடந்த தொல்பொருள் ஆய்வுகளை வைத்து விவாதிக்கிறார்.

மத்திய தரைக்கடல் வணிகம் கி.மு 15ஆம் நூற்றாண்டில் இருந்து நடந்துள்ளது. ஏனைய பொருட்களுடன் குரங்குகளும், மயில்களும், தந்தங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ரோம் வணிகத்தில் பதிலுக்கு தங்கம் இறக்குமதி. ஒரு வருடத்திற்க்கு ஆறு லட்சம் பவுன் வெளியேறியதாம். தங்கத்தின் மோகதிற்கு சுழி என்றோ போட்டு இருக்கிறோம். கிரேக்க மற்றும் உரோம வல்லுனர்களின் படைப்புகளில் கி.பி முதல் நூற்றாண்டுமுதல் இதற்கான குறிப்புகள் இருந்துள்ளன. ஐரோப்பாவுடன் நேரடி வணிகம் இல்லாதபோதும் கிரேக்கர்கள் இந்திய பொருட்களை அங்கு வணிகம் செய்துள்ளனர். இதன்மூலமே போர்ச்சுகல் நாட்டவர் நம் நாட்டிற்கு வர தூண்டு கோலாய் இருந்தது என்று ‘Land of Seven Rivers’-ல் படித்த ஞாபகம். வெளிநாட்டுடன் மட்டும் அன்றி உள்நாட்டிலும் கடல் மார்கமாக வணிகம் நடந்துள்ளது.

கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் பௌத்தர்கள் சமணர்களுடன் ஆரியர்களும் இங்கு வந்து குடியேற துவங்கி இருக்கலாம் என்கிறார். கி.மு 200 முதல் கிட்டத்தட்ட 460 ஆண்டுகள் தென்னிந்தியாவின் தக்காண மாநிலங்களை பெரிதளவு சாதவாகனர்கள் ஆண்டுள்ளனர். ஆந்திர மன்னர்களாகிய இவர்கள் வடக்கே மத்திய பிரதேசம் , தெற்கே காஞ்சி, மேற்கில் மைசூர் வரை சாதவாகனர் ஆட்சி விரிந்துள்ளது. அக்காலத்தில் கலிங்கத்தில் காரவேலர் என்ற மன்னர் இவர்களை வென்றதாகவும், கலிங்கத்தில் கலையையும் தழுவி நல்லாட்சி செய்ததாக ஹதிகும்பா கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. சாதவாகனர்களுக்கு பிறகு அரசுகள் பிரிந்து சிற்றசர்கள் ஆட்சி நடந்துள்ளது. இக்காலத்தில் சமுதாயமம் நிர்வாகவும் இணைந்து செயல்பட்டுள்ளன. அடுக்குகள் இருந்த போதும் கைத்தொழில், நெசவு, வணிகம் அனைத்தும் சிறப்பாக நடந்துள்ளன. சமண பௌத்த மாதங்களுக்கு மன்னர்களிடையே பெரும் ஆதரவு இருந்துள்ளது. பௌத்த குகைகளும் இந்து கோவில்களும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. குகைகள் காலங்கள் தாண்டி நிலைத்து உள்ளன. பௌத்தம் கி.பி முதல் இரன்டு நூற்றாண்டுகளில் உயர்ந்த நிலைய இங்கு அடைந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சாதவாகனர் வடக்கில் ஆண்ட போது வேங்கடம் முதல் குமாரி வரை பெருவாரியாக சேர சோழ பாண்டியர்கள் ஆண்டுள்ளனர். சங்க காலத்தின் கால வரையறை சரி வரையறை செய்ய இயலவில்லை எனினும், மூவேந்தர்களின் குறிப்பு மகாபாரதத்தில் உள்ளதையும் சங்க நூல்களில் உள்ள குறிப்பை வைத்தும் கி.மு 500 முதல் கி.பி 500 வரையிலான காலம் கடைச்சங்கத்தின் காலமாக இருக்கலாம் என்கிறார். தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு உரியதென்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு கடைச்சங்கத்திற்கு உரியதென்றும் நம்பிக்கை உள்ளது. திருக்குறள் இவைகளில் பழமையானது என்கிறார். சங்க காலத்தில் ஆண்ட மன்னர்களுள் சேரன் செங்குட்டுவன், கரிகால சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், பாரி, அண்டிரன் போன்ற மன்னர்களின் சிறப்பு பல சங்க நூல்களில் குறிப்பிட பட்டுள்ளது. அக்காலத்தில் நிலங்களை அதன் வளங்களின் அடிப்படையில் ஐந்திணைகளாக பிரித்தும், அப்பிரிவினை தங்களை ஒருநிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு செல்ல தடையின்றி அமைத்து கொண்டனர். உறைவிடம், ஆடைகள், உணவு பழக்கங்கள், கடவுள் வழிபாடு, பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இக்காலத்திலேயே நிலைபெற்றுள்ளன. தொழில் முறையில் பிரிவுகளாக இருந்த தமிழ்ச்சமுதாயம் ஆரியரின் வருண அடிப்படையுடன் கலந்து உட்பிரிவுகளான சாதிய கூறுகளுக்கு வந்தடைந்துள்ளது. சமண பௌத்த மதங்கள் இங்கே இணக்கமாக இருந்தன என்பதை தவிர வேறெதுவும் ஆசிரியர் குறிப்பிடவில்லை.

கி.பி 500 முதல் கி.பி 900 வரை அரசுகள் எழுந்த காலமாக கருதப்படுகிறது. சாதவாகனர்களுக்கு பின் தக்காணத்தில் சாளுக்கியர்களும், மேற்கு கங்கர்களும், இராஷ்டிரகூடர்களும், அந்நாளின் தமிழகத்தில் பல்லவரும், மூவேந்தர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். இக்காலத்தில் அரசுகள் ஓங்கி எழுந்தன, மன்னர்களை நாட்டின் பாதுகாவலர்களாக கருதியுள்ளனர். ஆரியரும் மிகுந்த செல்வாக்குடன் இருந்துள்ளனர். கோவில்கள் எழ, அதை சுற்றி ஊர்கள் உருவாக , பிராமணர்கள் கோவில்களின் பாதுகாவலர்களாக நியமிக்க பட்டனர். அவர்களுக்கு அக்ராஹாரமும் மன்னர்களால் வழங்கபட்டது. சமூகத்தில் உடன்கட்டை ஏறுதல், பலதார மணம் பரவலாக இருந்துள்ளது. பௌத்தமும், சமணமும் இந்து மதத்துடன் இணைந்தே வளர்ந்து வந்துள்ளது. கிறித்துவம் கேரளத்தின் சில பகுதிகளில் கடைபிடிக்கப்படுள்ளன. திருவாசகம், தேவராம் ஏனைய பக்தி இலக்கியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் இக்காலத்தில் தோன்றி இருக்கலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். கன்னடத்திலும் தெலுங்கிலும் இலக்கியங்கள் தோன்றலாயின. இந்த காலத்தில் நுண்கலை சிற்பங்கள் உருவாகியுள்ளன.

கட்டடக்கலை முதலில் தக்காணத்தில் பௌத்தர்களால் துவங்கப்பட்டுள்ளது. சைத்தியம் (கோவில்), விஹாரம் (பௌத்தமடம்) ஆகிய இரண்டு வகை கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அஜந்தா, எல்லோரா போன்ற இடங்கள் முதல் பகுதியில் (கி.பி 1 ஆம் வாக்கில்) தோன்றலும் பிற்பகுதியில் (கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கு மேல்) அடுத்தகட்ட வளர்ச்சியும் அடைந்துள்ளது. இதன் குகைகளில் உள்ள ஓவியங்களிலும் சிற்ப வேலைப்பாடுகளிலும் உள்ள வேற்றுமையில் இதை காணலாம் என்கிறார்.சித்தன்னவாசல், காஞ்சி கைலாசநாதர் கோவில் ஓவியங்களும் அஜந்தா ஓவியங்களும் மிக்க வேறுபாடு உடையன அல்ல என்கிறார். தமிழ்நாட்டில் பல்லவர்கள் கற்கோவில்களுக்கும் பிற்கால கட்டடக்கலைக்கும் வழிவகுத்துள்ளனர். அவர்களது பங்களிப்பு கற்கோவில்கள், சிற்பகோவில்கள் என இரண்டாக பிரிக்கலாம். மாமல்லபுரம் குகைகள் கோவில்கள், காஞ்சி கைலாயநாதர் கோவில் அவற்றுள் சேரும்.

கி.பி 7ஆம் நூற்றாண்டில் புத்தமமும் சமணமும் கேரளத்திலும் ஆந்திராவிலும் அழிந்து கொண்டிருந்தது. தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் ஓங்கித்தான் இருந்துள்ளன. அதற்கு அப்போது இருந்த மன்னர்களின் ஆதரவே காரணம். கி.பி 6ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்து சமயத்தவர்கள் இதை அச்சத்துடன் பார்த்தார்கள். இதன் மூலமே 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்து சமய புத்துயிர்ப்பு துவங்கியது. இது 9ஆம் நூற்றாண்டு இறுதி வரை ஒரு புரட்சி போலே நடந்துள்ளது. இதில் இருந்து ஆசிரியர் எடுக்கும் கூற்று முக்கியமாக பட்டது. சமணமும் பௌத்தமும் அறஒழுக்கங்களை அறுதியாக கடைபிடித்ததனால் சலிப்படைந்த மக்கள் தனிப்பட்ட கடவுள் சார்ந்த பக்திக்கு செல்லலாயினர் என்கிறார்.

பக்தியும் சடங்குகளும் இணையாக இந்து சமயத்தில் முன்மொழியப்பட்டது. இதிலிருந்து சைவமும், வைணவமும் தோன்றியது. சிவனையும் திருமாலையும் உருவச்சிலைகளாக வைத்து, பாடல்களை இயற்றி பக்தி மார்க்கம் தொடங்கியது. சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் தோன்றினர். இதில் பல்வேறு சமூக பிரிவினரும் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

63 சைவ நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் இயற்றி ஒருங்கிணைத்தது தேவாரப்பாடல்கள். பிற்காலத்தில் இயற்றிய பெரிய புராணம் (12ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் இயற்றிய), திருப்புகழ் (15ஆம் நூற்றாண்டு, அருணகிரிநாதர் இயற்றிய), திருவருட்பா (19ஆம் நூற்றாண்டு, ராமலிங்க அடிகளார் இயற்றிய) குறிப்பிடத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர்.

பக்தி வளர்ச்சியில் அடுத்தகட்டமாக, அறிவியல் நெறிகள் எடுத்துரைக்க பட்டன. இதை சைவத்தில் துவங்கியவர் திருமூலர் (காலம் 6வது அல்லது 9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்). அவர் அந்நெறிகளை திருமூலத்தில் தொகுத்துள்ளார். உயிரும் பொருளும் உண்மை எனவும், சிவன் அன்பின் உருவம் என்றும் உரைத்தார். கி.பி 790 கலில் சங்கராச்சாரியார் அத்வைத கருத்துக்களை தோற்றுவித்தார். இதன்படி இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் உயிர்பொருள் என்பதும், தனிமனிதன் அம்முதற்பொருளில் இரண்டற கலந்து விடும் என்பதும், இந்நிலையை அடைய அறியாமை அகன்றொழிய வேண்டும் என்றும் உரைக்க பட்டுள்ளது. இதன் ஒரு பிரிவே தென் இந்தியாவின் வீர சைவ முறை. இது 12ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் இயற்றப்பட்டது. இதன்படி சிவனே முழுமுதற் கடவுள் என்றும், அனைவரும் ஓரினம் என்றும் நிறுவி வந்தது. ஆரிய நான்பரிவினைகளை மறுத்தனர்.

வைணவத்தில் கி.பி 500 முதல் 850 வரை 12 ஆழ்வார்கள் வாழ்ந்தார்கள். காஞ்சியில் பொய்கை ஆழ்வாரும், மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வாரும், மைலாப்பூரில் பேயாழ்வாரும், திருமழிசையில் திருமழிசை ஆழ்வாரும் முதல் பிரிவை சேர்ந்தவர்கள். இரண்டாம் பிரிவில் பாண்டி நாட்டை சேர்ந்த நம்மாழ்வார் , மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மற்றும் சேர நாட்டை சேர்ந்த குலசேகர ஆழ்வார் ஆவர். மூன்றில் சோழ நாட்டை சேர்ந்த தொண்டரடி பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கைஆழ்வார் ஆவர். ஆழ்வார்கள் இயற்றிய பாடல்கள் பல்வேறு காலங்களில் பிரபந்தத்தில் தொகுக்க பட்டுள்ளன. இதில் நம்மாழ்வார் இயற்றிய நாலாயிரப்பிரபந்தம், பெரியாழ்வார் இயற்றிய திவ்ய பிரபந்தம், பெரியாழ்வாரின் மகளாகிய ஆண்டாள் இயற்றிய திருப்பாவைகளும் அடங்கும்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் கருத்துக்கள் வந்தன. ஆழ்வார்களுக்கு பின்னர் ஆச்சாரியர்கள் தோன்றினர். இங்கு அரங்கநாதாச்சாரியார் என்பவரால் விசிட்ட அத்வைதம் தோன்றியது. இறைவன் இணையடிகளில் ஆன்மா சரணாகதி அடைந்து தன்னை முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும் என்ற பிரபத்தி கொள்கையை எடுத்து ஓதினார். மத்துவர் என்ற ஆச்சாரியார் சங்கரரின் அத்வைத கொள்கையை கடுமையாக எதிர்த்து துவைத்த கொள்கையை நிறுவினார். அதன் படி நாராயணனே தனிப்பெரும் கடவுள். உலகம் என்பது உண்மையில் இருக்கும் ஒருபொருள். இறைவனின்று வேறுபட்டது. பின்னர் (12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில்) அடியார்கள் பிரிந்து வடகலை தென்கலை என்றாயினர். வடகலை வடமொழியும் நான்மறையும், தென்கலை தமிழ் மொழியும் திவ்யப்பிரபந்தத்தையும் தலைமையாக கொண்டன.

சோழர்களின் பொற்காலமாக இருந்த கி.பி 10 முதல் 200 ஆண்டுகள் விரிவாக ‘பிற்கால சோழர்களும் சாளுக்கியர்களும்’ தலைப்பிற்கு கீழ் கூறியுள்ளார். சிற்றரசர்கள் ஆக இருந்த சோழர்கள் தங்களது எல்லை தஞ்சாவூர் முதல் வங்காளம், கீழே மலாயா தீவு (மலேஷியா) வரை எவ்வாறு விரிவடைய செய்தனர் என்பதை விளக்குகிறார். பத்தாம் நூற்றாண்டின் ராஜராஜசோழன், அதன் பின் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கர், இறுதியில் மூன்றாம் இராசேந்திரன் வரை தென்னிந்தியாவின் பல்வேறு நிலங்களை நேரடியாகவோ, சிறுமன்னர்களின் துணையுடனோ ஆட்சி புரிந்துள்ளனர். கி. பி 1297 ல் பாண்டியர் வெல்லும் வரை சோழர்கள் கீழை சாளுக்கியர்களிடமும், இராஷ்டிரகூட மன்னர்களிடமும், சேர பாண்டிய அரசுகளுடனும் சண்டையிட்டு வென்றும் தோற்றும் வந்துள்ளனர். அரச குடும்பங்களில் நல்லுறவுக்காகவும், அரசுகளை இணைக்கவும் திருமணம் உதவியாய் இருந்துள்ளது.

9 ஆம் நூற்றாண்டில் கேரளத்தில் சேரமான் பெருமாளுக்கு பிறகு பிற சேர மன்னர்களும் வேணாட்டு மன்னர்களும் ஆண்டுள்ளனர். சேரர் கொல்லத்தை தலை நகரமாக கொண்டு சுற்று வட்டாரத்தை ஆண்டுள்ளனர். தென் கேரளம் வேணாட்டு மன்னர்கள் ஆண்டுள்ளனர். சேர மன்னர்கள் ஸ்தாணு ரவி, பாஸ்கர ரவி வர்மர், கோதை ரவி வர்மர் பெயர்கள் கல்வெட்டுகளில் காணபட்டுள்ளன. பாஸ்கர ரவி வர்மர் கிறிஸ்துவ வியாபாரிகளுக்கு பல சலுகைகைகள் அளித்து சிற்றுரையும் கொடுத்ததாக தெரிகிறது. கி.பி 11 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பல சேர மற்றும் வேணாட்டு பகுதிகளையும் கைப்பற்றியதாக கலிங்கத்துப்பரணி கூறுகிறது. கி.பி 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேணாட்டு மன்னர் சோழர்களை வென்று வேணாட்டில் தமது ஆட்சியை நிலைநாட்டினர்.

இந்த காலகட்டத்தில் போரும் ஆட்சியும் அரசு உரிமை குழப்பங்களும் நிறைந்து காணப்பட்டுள்ளன. அரச விழாக்களும், சடங்குகளும் அதிக செலவு செய்யப்பட்டது. இவ்விழாக்களில் அசர குடும்பத்தை சார்ந்தவர்களும், அரச தூதர்களுமே பங்கேற்றனர். இதனால் வெகு ஜனங்களின் வெறுப்பு வளர தொடங்கியது. ஆனால் சோழர்களின் நிர்வாகம் தனி தனி அலுவலர்களை நியமித்து சிறப்பாக நடைபெற்றது.நிர்வாகம் பெருக செலவும் பெருகியது. நிலத்தை அளந்து அதன் தன்மைக்கு ஏற்ப வரி வசூலித்தனர். மக்களிடம் வரி மூன்றில் ஒரு பங்காக வசூலிக்க பட்டது. இது மற்ற அரசுகளை விட அதிகமாகவே இருந்தது. ஆறில் ஒரு பங்கு என்பது பொதுவாக இருந்துள்ளது சோழர் அரசை தவிர்த்து. தொழில் வரி, வீட்டு வரி, போக்குவரத்து வரி என பலதரப்பட்ட வரிகள் இருந்துள்ளன. குயவரின் சக்கரத்தின் மீதும், நாட்டிய மகளிரின் கண்ணாடிக்கும் கூட வரி வசூலானது!

இக்காலத்தில் (9 – 14 th century AD) கிராம ஆட்சி முறை பரவலாக தென்னிந்தியாவில் இருந்துள்ளது. பிரமேதயம், ஊர் என இரு பிரிவுகள் இருந்துள்ளன. பிரமேதயம் பிராமணர் இருந்த பகுதிகளில் இருந்த ஆட்சி முறையையும், ஏனைய இடத்தில் ஊர் முறையும் இருந்துள்ளது. இதுவே உட்சாதிகள் அமையவும் காரமாகின போலும். பெண்கள் வீட்டுக்குள் அடக்கப்பட்டதும், உடன் கட்டை ஏறும் வழக்கமும் இக்காலத்தில் பரவலாக இருந்துள்ளது. கேரளத்தில் பெரிதாக ஜாதிய கூறுகள் வரவில்லை என்றாலும் நாயர், நம்பூதிரி இனங்கள் கிராமங்களில் ஆட்சி புரிந்துள்ளனர். தாராமங்கலத்தில் முதலியார்களும், கோவை பகுதியில் வேளான் குடிகளும் தோன்றியுள்ளன.

இக்காலத்தில் பக்தி இயக்கத்தோடு கட்டட கலையும் சிறப்புற திகழ்ந்தது. பிற்கால சோழ கோவில்கள் சதுர பிரகாரம் அழகிய விமான வேலைப்பாடு கொண்டது. தென்னிந்தியர்கள் கடல் கடந்து தெற்கு ஆசியா நாடுகளுக்கு கி.மு வில் இருந்து சென்றத்துக்கான பல அடையாளங்களை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அதோடு அந்நாட்டு நாகரிகமும் திராவிட பழக்கத்துடனாக இணைந்தது என்பதையும் கூறுகிறார். மலேஷியா, சம்பா, பாலி, கம்போடியா, ஸ்ரீலங்கா மற்றும் சில ஆசியா இதில் அடங்கும். சோழர் ஆட்சியின் போது இதில் சில நாடுகளுக்கு படையெடுப்பு இருந்த போதும், பெரும்பாலும் பொது மக்கள் வணிகத்திற்கும், உள்நாட்டு பிரச்னைக்காகவும் இடம் பெயர்ந்து சென்று நிறுவியது என்னும் போது வியப்பளிக்கிறது.

Leave a comment