ஓநாய் குலச்சின்னம் – புத்தகம்

Wolf Totem என்ற சீன மொழியில் எழுதப்பட்ட நாவலின் மொழிபெயர்ப்பு. சி.மோகன் அவர்களால் மொழிபெயர்க்க பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு என்று எங்குமே உணரவில்லை. இது மங்கோலிய நிலத்தில் நாடோடி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த மேய்ப்பர்களின் கதை. அதில் வாழும் ஓநாய்கள் கதையின் நாயகர்கள். ஓநாய்களை தெய்வத்தின் படைப்பாகவும் மேய்ச்சல் நிலத்தின் நண்பனாகவும் நம்பும் மேய்ப்பர்கள்.

மங்கோலியா புல்வெளி பிரதேசம். வருடத்தில் பாதி குளிர் காலமாகவும், சிறிய கோடை காலமும் இளவேனிற்காலமும் கொண்ட பிரதேசம். மரங்கள் இல்லாத புல்வெளி. மேய்ச்சல் நிலம். மேய்ச்சல் நில மக்கள். எலிகள், மர்மோட்கள், செம்மறிஆடுகள்,மான்கள், நாய்கள், குதிரைகள் மற்றும் ஓநாய்கள்.பருவத்திற்கு ஏற்ப இடம் மாற்றும் நாடோடி வாழ்க்கை. வேரூன்றிய நம்பிக்கைகள். நம்பிக்கையை பிரதானமாக கொண்ட வாழ்க்கை. இதில் எதுமே இல்லாமல் உள்ளே சென்று அவர்களது வாழ்க்கையை நேரில் பார்த்து வந்தது போல் அனுபவம். பரிமாண வளர்ச்சியாக கருதப்படும் விவசாய வாழ்க்கை முறைக்கு வரும் முன் நிகழும் போராட்டம். அதில் உடையும் நம்பிக்கைகள், மனிதர்கள்.

மனிதர்கள் புதிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் முன் அங்கு மற்ற உயிரினங்கள் சுதந்திரமாக உள்ளன. சம நிலையை காலம் காலமாக நிலைநாட்டியுள்ளது அவ்வுயிரினங்கள். நாம் புகுந்து அதை குலைக்கிறோம். நம்மிடம் ஒத்து வாழ்கிற, தேவை படுகிற உயிரினங்களை விட்டு வைத்து மற்றதை அளிக்கிறோம். அப்படி ஒரு நிகழ்வை அனுபவத்தை நம்மிடம் கொண்டு வருகிறது.

தினசரி வாழ்க்கை மிக குறுகியது. வீடு, வீட்டோடு வேலை, சிறிய சுற்றம் என்ற வாழ்க்கையை தாண்டி புதிய நிலம், புது மனிதர்கள், இன்று நம்ப முடியாத அன்றைய நம்பிக்கைகள் என நம் எண்ணங்களை விரிவைடைய செய்கிறது. சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. நம்மருகில் வாழும் உயிரினங்களை புதிதாய் பார்க்க வைக்கிறது.

நம்மை மாற்றிச்செல்லும் புத்தகங்களில் ஒன்று.

Leave a comment