நிற்க!

சில சமயங்களில் ஏதாவது ஒன்று நம்மை நிறுத்தி வைக்க பார்க்கிறது. நம் எண்ண ஓட்டத்தை, தினசரி ஓடிக்கொண்டிருக்கும் துடிப்பை, படித்துக்கொண்டிருக்கும் விஷயங்களை, வேலையை, உணவை. இப்படி எல்லா விஷயங்களையும் நின்று யோசிக்க வைக்கும். போய்க்கொண்டிருக்கும் பாதையை கேள்வி எழுப்பும்.

மாற்று கருத்துக்களை உள்புகுத்தும். பல புதிய பாதைகளை காட்டி தள்ளப்பார்க்கும். என்றோ கிடப்பில் போட்ட விஷயங்களை தேவையானது போல் கொண்டு வரும். நேற்று வரை தீர்மானமாய் இருந்த கருத்துக்களை தடுமாற்றம் கொள்ள செய்யும். வருங்காலத்தை மாற்றி யோசிக்க வைக்கும். அடித்தளமற்ற நம்பிக்கையின் மேல் கோட்டை கட்ட ஆரம்பிக்கும்.

இதன் காரணி ஒன்றும் பெரிதாய் இருக்க வேண்டியதில்லை. ஒரு வார்த்தை, ஒரு பதில், ஒரு கேள்வி,ஒரு வசனம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கிருந்தும் இருந்தும் இருக்கலாம், புத்தகம் உட்பட.

அனுபவப்பட்ட மூளைக்கு தெரியும் சில கணங்களில். ஒதுக்கி வைத்து அன்றாடத்தை தொடர முடியும். எப்படி எடுப்பது முடிவை. தொடரவா நின்று யோசிக்கவா என்று.

ஆழ்மனது அதன் பக்கத்து நியாங்களை கொண்டு வந்து முன்னிறுத்தும். அன்றாடத்தின் அலுப்பை பூதாகரமாக காட்டும். எரிச்சல் பட வைக்கும். பரபரவென்று தேட வைக்கும். அதனுடைய முன்முடிவே சரி என்று சான்றுகள் கொண்டு வரும். மூளைக்கு புரிய வைக்க அல்லது சலவை செய்ய.

இப்பிரபஞ்சத்தில் பல்லாயிரம் ஆண்டு சுழன்று வரும் இந்த உலகில், நாம் ஒரு சிறு, சிறிதினும் சிறிய புள்ளி மட்டுமே. ஒன்றில் இருந்து இன்னொன்று ஆக பலநூறு வருடங்கள் ஆகும். எதுவும் ஒருவருடையது அல்ல. ஆண்டவர்கள் கூட தனக்கு முன் இருந்தவர்கள் அரம்பித்த ஒரு கோட்டின் ஒரு புள்ளி மட்டுமே. ஒரு புள்ளி திசையை பெரிதாக மாற்றுவதில்லை.நமக்கு அருகில் உள்ள மரம் நம்மைவிட அதிகம் பார்த்திருக்கும். அதன் விதை பல்லாயிர ஆண்டு பரிமாண வளர்ச்சிக்கு உட்பட்டிருக்கும். அதற்கு தெரியும் எந்த இடத்திற்கு எப்படி மாறவேண்டும் என்று.

பல சமயங்களில், அதுவும் இந்த தருணங்களில் நாம் பிரபஞ்சத்திற்கு மேல் நம்மை நிறுத்தி முடிவு செய்கிறோமோ என்று தோன்றுகிறது. புள்ளி என்று உணர்தல் நம்மை சிறுமை படுத்தி கொள்ள அல்ல. நம் நிலையை உணர்ந்து முன்னோக்கி செல்ல. ஒரு அடியேனும் முன்னோக்கி.

அதற்காக அகலக்கால் வைக்கவும் வேண்டாம். தடுமாறி விழுந்தால் எழுவதற்கு நிறையவே வேண்டும். வயது தைரியம் நம்பிக்கை செல்வம் என பல.எல்லாம் இருந்தால் செய்தும் பார்க்கலாம். இல்லையேல் ஒரு அடி போதும்.

இந்த முன்னகர்தல் இருக்கும் வரை நின்று யோசிப்பது சரியே.

Leave a comment