சித்தார்த்தா – புத்தகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே நூறு வருடங்களுக்கு முன்பு எழுதியது. அறிமுகம் தேவை இல்லாத புத்தகம். படிக்கும் முன் ஆசிரியரை பற்றி அறியும் ஆவல். இது ஒரு வித சந்தேக புத்தியோ என்று கூட தோன்றுகிறது. தராசிட என்னக்கு என்ன தெரியும் என்றும் தோன்றும். இருந்தும் பார்த்ததில், ஹெஸ்ஸேவின் வாழ்வும் தேடலும் பல இடங்களுக்கும் பல கோணங்களுக்கும் சென்றுள்ளது. பௌத்தம், இந்திய அறிமுகம் அதில் ஒரு சில வருடங்கள்.

தேடலை பிரதானமாக கொண்ட கதை. புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சித்தார்த்தா எனும் இளவரசனின் கதை.

இதை ஏன் சித்தார்த்தா என்ற பெயர் கொடுத்தார் என புரியவில்லை. ஒரு மனிதனின் தேடல். அதுவும் இந்த காலத்தின் ஒரு நிலையற்ற தேடல் போல் தோன்றுகிறது. இந்த புத்தகமும் ‘தம்மம் தந்தவன்’ புத்தகமும் அடுத்தடுத்தது படித்ததில் தேடலின் வேறுபாடு தெரிந்த போதும், ஒரு தெளிவு கிடைக்க வில்லை. ‘தம்மம் தந்தவன்’ புத்தரின்(சாக்கிய முனி) கதை. இதிலும் பௌத்தத்தின் கருத்து ஆழ்ந்து சொல்ல படவில்லை என்றபோதும், அந்த தேடலின் மைய்ய கருத்தை தெளிவாக கொண்டு சொல்கிறது.

ஹெர்மன் ஹெஸ்ஸே ‘சித்தார்த்தா’வின் தேடல் அவரது மனம் செல்லும் போக்கில் சென்று, தான் வாழ்ந்து உணர்கிறார். ஒரு சராசரி மனிதனாக உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நடப்பதை எதிர்கொள்கிறார். அதில் துன்பம் வரும் போதோ அல்லது திருப்தி அடையாத போதோ, வெளியே வந்து அடுத்ததை நோக்கி செல்கிறார். இறுதியில் தன்னை முழுவதுமாக ஏற்று கொண்டு, இயற்கையோடு சரணடைகிறார்.

புத்தகத்தில் பல இடங்களில் ஞானம் ஒரு தொடர்ச்சி இல்லை, புத்தகமோ குருவோ சொல்லி கொடுத்து வருவதில்லை என்ற கருத்து சொல்லப்படுகிறது. இதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்த போதும், அதை உறுதி படுத்தும் தத்துவ அறிவு இன்று கிடையாது. இந்து, பௌத்த தத்துவத்தை கற்க தோன்றுகிறது.

நமது தேடல் எது ? ஹெர்மன் ஹெஸ்ஸே சித்தார்த்தாவின் உடையதா ? இல்லை ஒரு மரபின் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமா?

Leave a comment