பெங்களூரு வழி கோலார்

பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற வார இறுதியில் பயணித்திருந்தோம். இருந்த நேரத்தில் நகரில் பார்க்க இடம் தேடி கிடைக்காமல் வீண் செலவுகள் செய்து கழிந்தன. உருப்படியாக சென்ற இடம் HAL அருங்காட்சியகம். உருப்படி என நினைத்து வீண் செலவு செய்த இடங்களும் அடங்கும்.

HAL அருங்காட்சியகம் நம் நாட்டின் விண்வெளித் துறையின் வளர்ச்சியை விரிவாக காண்பிக்கின்றன. 1910களில் இருந்து பறக்க ஆரம்பித்த சிறிய பெரிய விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உள்ளே அமர்ந்து செல்லும் போது ஆகாயமும் பறப்பதுவும் தான் அதிசயமாக இருக்கும். தாங்கிச் செல்லும் விமானத்தை பெரிதாக யோசித்ததில்லை . இங்கு பார்க்கும் போது இரும்புப் பறவைகள் வியப்பில் தள்ளுகின்றன. வித விதமாக. பெரிய மீட்பு ஹெலிகாப்டர், விமானி இல்லாத லட்சியா விமானம், போர் விமானங்கள் என நமக்கே சரியாக படித்திருக்கலாமோ என்று நினைக்க வைத்தது.

மனிதனின் அறிவு இட்டுச்செல்லும் தூரத்திற்கு வானமும் எல்லை என்று ஒரு எழுச்சி எழும். பள்ளிச்சிறுவர்களுக்கு இளவயதில் அழைத்துச் செல்லும் இடத்தில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்.

பெங்களூரு மாளிகை 250 ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றோம். மாளிகை ஏதோ ஒரு வகையில் சென்ற காலத்துக்கு கூட்டிச்செல்லும் ஒரு அனுபவமாகவே இருக்கும் என்றெண்ணி சென்றோம். அங்கே அரச குடும்பத்தின் ஆடம்பரமும் அவர்கள் வேட்டையாடி அழித்த புலி யானைகளின் அடையாளங்களுமே இருந்தன. நொந்து கொண்டு வெளியேறினோம்.

முன்தினம் கேட்ட உரை கூகிள் கேட்டிருக்கும் போல. பயணங்கள் புது புது இடங்கள் அகத்தை விரிவாக்கி கொண்டே செல்லும் என்பதை கேட்டு வழக்கமான கிருஷ்ணகிரி வழியை தவிர்த்து கோலார் முல்பாகர் சித்தூர் வழியாக பாதையை அமைத்தது.

பெங்களுரு தாண்டியவுடன் சிறு சிறு மலைகள் கண்ணில் தென்பட்டுக்கொண்டே வருகிறது. கோலார் அந்தரகங்கே கோவில் சிறு கற்பாறை மலையின் நடுவில் உள்ளது. கோடையின் உச்சியில் காய்ந்து கிடந்தது ஊர். ஊரின் நடுவில் உள்ளது இந்த மலையும் கோவிலும். இதில் ஒரு ஊற்று நந்தியின் வாய் வழியாக எப்பொழுதும் வழிந்து கொண்டே உள்ளது. நிலத்திற்கு அடியில் கங்கை ஓடுகிறது அதுவே ஊற்றாக வருகிறது என்று நம்பப்படுகிறது. ஊருக்கு அந்தர கங்கை என்ற பெயரையும் கொடுத்துள்ளது. சிவனை தரிசித்து விட்டு பக்கத்தில் அனுமன் கோவிலை பார்த்து எதற்கு இங்கே ஹனுமான் என்று யோசித்து கொண்டு வர, கூடவே வந்த குரங்கு வந்து பையை இழுத்தது. இதில் ஒன்றும் இல்லை என நான் அதனிடம் உரையாடி கொண்டிருக்க, என்னை நம்பாமல் ஜிப்பை திறந்தது. என்ன அழகாக திறக்கிறது என நான் வியக்க இன்னொரு குரங்கு வந்து இன்னொரு ஜிப்பை திறந்தது. பையை கீழே போட்டு நான் நகர, அது இரண்டும் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தது. சண்டையில் பையை கீழே போட்டு விட, அதை எடுத்து கொண்டு நகர்ந்தோம். மனிதன் வந்தது குரங்கில் இருந்துதான் என்று உறுதிப்படுத்தி கொண்டு திரும்பினோம்.

Antaragange temple, Kolar

அதே ஊரில் சோமேஸ்வரர் கோவில் சென்றோம். சோழர்களால் கட்டப்பட்டு விஜயநகர அரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. திராவிட முறையில் தூண்களும் சிற்பங்களும் செதுக்க பட்டிருந்தது. தூண்கள் தனி தனி கற்களாக நெருக்கமாக அமைக்க பட்டிருந்தது. காலம் கடந்து நிற்கும் இடத்தை தரிசித்து விட்டு கிளம்பினோம்.

Someshwarar temple, Kolar
Dravidian Architechture

அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி ….

Leave a comment