அவள் !

அசோகமித்திரனின் ‘இன்று’ம், கற்பது கேட்பது கருதுவது பொய் என்றும் மனதிற்குள் ஒரு சஞ்சலம். இதில் ‘அவன்’ என்ற எழுத்து நடை ஏற்படுத்திய தாக்கம். இங்கு ஒரு அவள்.

சில மாதங்களாகத்தான் எனக்கு அவள் பரிச்சியம். ஒவ்வொரு நாளும் மதிப்பை ஏற்றி கொள்கிறாள். இது அவளின் கதை.

அவளின் மகளுக்கு கல்யாணம். மனதிற்கேற்ற குடும்பம் அமைந்துள்ளது. மகளுக்கு பிடித்த மணவாளன்.

திரும்பிப் பார்க்கிறாள்.

ஒன்பது மாத குழந்தையை கையில் கொண்டு ஆரம்பித்த வாழ்க்கை. வேலைக்கு போகாத கணவனை வைத்து ஒரு வேலை கஞ்சி குடித்து, மகளையும் இப்போராட்டத்திற்குள் தள்ளி விட மனதில்லை. வந்து விட்டாள் தனியே.

பாய் போடும் அகலம் கூட இல்லாத ஒரே அறை. வாங்க முடிந்தது என்னவோ ஒரு மண்ணெண்ணெய் அடுப்பும், பால் பாத்திரமும், சிறிய வாணலியும். ஒரு சிறிய காலண்டர் பாபா.

“என்னடி இது?” வீட்டுக்கார அம்மா கேட்டாள்.

“நான் நம்பும் தெய்வம்”

“உன்ன நா எப்படி நம்புறது? “

“ஒரு மாசம் பாருங்கம்மா, நா ஒழுங்கில்லைன்னு நெனச்சீங்கன்னா உடனே காலி பண்ணிடுறேன்”

அப்போது சம்பளம் 900 ரூபாய். வாடகை 450. படுக்க பாய் இல்லை, மின்விசிறி இல்லை. அவளும் குழந்தையும். இருபத்தி மூன்று வருடங்கள் ஓடி விட்டது.

இன்று நினைக்கும் போதும், அவள் கண்கள் ததும்புகிறது. அவள் முன்னாள் தன்னை கைவிட்ட கணவன், பாரமாய் நினைத்த உறவுகள், தன்னையே நம்பி உள்ள பச்சிளம் குழந்தை.

எங்கு போனாலும் சுமந்து சென்றுள்ளாள். தான் வேலை செய்யும் வீட்டின் பின்புறத்தில் குழந்தையை படுக்க வைத்து விட்டு உழன்ற ஞாபகம். பிள்ளை பள்ளிக்கூடம் செல்லும் வரை பட்ட கஷ்டங்கள் அவள் கண் முன்னே ஓடுகிறது. திரைதான் தெரிகிறது அவளுக்கு, நான் தெரியவில்லை.

சிறிது சிறிதாக சேர்த்தி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு வந்து விட்டாள். அதை தாண்டி பிள்ளையை படிக்கவும் வைத்து விட்டாள். மகள் இன்று தனியார் நிறுவனத்தில், தன்னை பார்த்துக்கொள்ள முடியும். அவளைப் போல் அல்லாட வேண்டியதில்லை. அவமானப் பட வேண்டியதில்லை. இன்றும் அவள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறாள்.

இரண்டு நாள் தொடர்ந்து வெளியே சுற்றி வந்தால் சோர்வடைகிற எனக்கு, அவளின் ஓட்டம் கேலி செய்கிறது. பாரதிக்கு இவளை தெரியுமா ? எனக்கு இன்னும் பாரதியை தெரியாதே . அசோகமித்ரனுக்கு தெரிந்திருக்கும். ஜமுனாவும் டீச்சரம்மாவும் இவளை உணர்வார்கள். ஏன், பொறாமை கூட படலாம். இவளால் முடிந்ததே வெளியே வர!

Leave a comment