மழைக்காலம்!

ஒவ்வொரு வருடமும் நினைவுகளை விட்டு செல்லாமல் போவதில்லை. டிசம்பர் முதல் பாதி ஏதாவது வரும். இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாவதோ! கடந்த 6 அல்லது 7 வருடங்களாக பருவ மழையோ அல்லது ஏதாவது ஓர் பெரிய நிகழ்வோ நகரத்தை உலுக்கி விட்டுத்தான் போகிறது.

கொரோனாவிற்கு பின் இதுவே வீடடங்க வேண்டிய நாட்கள். நகரத்தை அமைதி ஆக்கி இருட்டாக்கி, வெளியே இருட்டுதான் உள்ளே பார் என்று நினைவுறுத்தும்.

ஓட்டம் குறைய, உணவை குறைக்காமல் போகும் போது கேள்வியை எழுப்பும்.

பிற சமயங்களில் ஈர்க்கும் பொழுது போக்கு சாதனங்கள் உயிரிழக்க, வீட்டுற்கு வெளியே உள்ள குருவிகள் ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொள்வது காதில் விழும். நாய்கள் குரைக்கும். செடி கொடிகள் கண்ணுக்கு அழகாய் தெரியும். தூரத்தில் பேசும் குரல்கள். கடிகார முள்ளின் ஓசை.

தூங்கிக் கொண்டிருந்த விளையாட்டு பொருட்கள் நினைவுக்கு வரும். தொடர்ந்து வேறு வேறு எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகள் இல்லாமல் விளையாட முடியும்.

நாளின் மணித்துளிகளை எப்படி இந்த மின்சாரம் நமக்கு தெரியாமலே நம்மிடம் இருந்து திருடிக் கொள்கிறது. இதை அறியாமல் எப்போது வரும் என்று காத்தும் இருக்க வேண்டி இருக்கிறது.

நமக்கு அளிக்கப் பட்டதை நினைவுறுத்தும். பிறர் நமக்காற்றும் சேவையை உணர வைக்கும். இந்த புயலில் எழுபதை ஒட்டிய பால்காரர் ஐந்தரை மணிக்கு பால் போடும்போதும்; புயல் மழை என்றில்லாமல் வீட்டு வேலைக்கு வரும் அக்காக்களும், துப்புறவு பணியாளர்களும்; தண்ணீரில் கால் வைக்க நாம் யோசிக்க அதில் இணைப்பை பழுது பார்த்தும் மரங்களை அகற்றியும நம் அன்றாடதிற்கு திரும்ப அலைத்துச் செல்லும் ஆட்களைப் பார்க்கும் போதும்.

அன்றாடத்திற்கு திரும்பியும் ஆவன செய் என்று உள்ளே ஒலிக்கிறது.

Leave a comment