The Bite of the Mango – புத்தகம்

நமக்கிருக்கும் கவலைகள் ஏராளம். பிரச்சனைக்களும் தான். வீட்டில் தொடங்கி, அலுவலகம், சொந்தம், உடல்நிலை என பட்டியல் போடலாம். அப்படி ஏதாவது பிரச்சனையில் இருக்கும் போது, அதை விட பெரிய பிரச்சனை ஒன்று நிகழும் போது, சின்னதை விட்டு பெரியதை பிடித்துக்கொள்வோம். சிறிதோ பெரிதோ, முட்டி நிற்கும் சூழ்நிலை வரும் போது படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. நம் மனதில் நன்றி உணர்வை உருவாக்கும். பிரச்சனைகளால் நின்று இருந்த நல்ல விஷயங்களை துவங்கச் செய்யும். நம் பிரச்சனைகள் நிஜமாகவே பிரச்சனைகள் தானா ; நம்மக்கு கொடுக்க பட்டத்துக்கும் வாங்கி கொண்டதற்கும் திருப்பி என்ன கொடுக்கப் போகிறோம் என்று சிந்திக்க வைக்கும்.

பிரிட்டிஷ் அடிமைகளுக்காக சென்ற நாடுகளில் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோனி என்ற நாடு. இந்த நாடு 1964ல் பிரிட்டிஷ்யிடம் இருந்து விடுதலை பெற்று குடியரசாக இருந்து வருகிறது. அந்நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்கிறாள் மரியாது என்கிற சிறுமி. இருநூறு பேர் வாழும் ஊர். மின்சாரமோ பள்ளிக்கூடமோ இன்னும் வரவில்லை. இது நடப்பது 1996 அல்லது 98 வாக்கில். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள ஒரு புரட்சி குழு அரசை எதிர்த்து போராடுகிறது, வன்முறையை பிரயோகித்து. புரட்சியாளர்கள் கிராமங்களை சூறையாடுகிறார்கள். பலரை கொன்றும், அதற்கும் மேலானவர்கள் கை கால்களை துண்டிக்கவும் செய்கிறார்கள். இதனால் மக்கள் காடு வீடு என மாறி மாறி ஒளிந்து வாழ்கிறார்கள். மரியாது அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தனியாக பிடிபட்டு இரண்டு கைகளும் துண்டித்து விடுகிறார்கள் அவள் வயதை ஒத்த புரட்சியாளர்கள். கைகள் இல்லாமல் அவள் எழுதிய புத்தகம் தான் இது – “The Bite of the Mango”

பிறக்கும் இடம் எந்த அளவுக்கு ஒருவர் வாழ்வை முன்னும் பின்னும் தள்ளி விடுகிறது. 12 வயதில் இரண்டு கைகளும் பலமுறை வெட்டி துண்டிக்கப்பட்டு, அதே வயதில் சொந்தத்தில் ஒருவரது வன்முறையால் குழந்தைக்கு தாய் ஆகி, சுகாதாரமற்ற ஊனமுற்றோர் முகாமில் வாழ்ந்து, பிழைப்பிற்காக பிச்சை எடுத்து என இந்த பெண் கடந்து வந்ததை படிக்கும் போது உணர முடியும் நாம் வாங்கி வந்த வரத்தை. தனது 14 வயதிற்குள் பல வாழ்க்கைகளை வாழ்ந்து விடுகிறாள். இவளது இக்கட்டான சூழ்நிலையில் கூடவே இருக்கும் தோழர்கள், அவர்களும் கைகளை இழந்தவர்கள் தாம் ;கிராமத்தை விட்டு இவர்களோடு முகாமில் வந்து துணையாக இருக்கும் சொந்தங்கள் ; யாரென்று தெரியாமலும் உதவி செய்யும் உள்ளங்கள் ; மரியாது கை துண்டிக்கப்பட்டு பசியிலும் வழியிலும் மயக்கமுற்ற நிலையில் மாம்பழத்தை கொடுத்து வழி சொல்லி அனுப்பும் மனிதர் என பல நல்ல மனிதர்கள். மனிதனின் கொடூரம் ஒரு புறமும், அவனது தியாகம் ஒருபுறமும் என எதிர் எதிர் துருவங்கள் புத்தகம் முழுவதும். முடிக்கும் போது நம் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் மறைகிறது.

இன்று நமக்கு கிடைக்கும் கல்வி அதன் மூலன் வரும் வேலை வாய்ப்புகள், வேலையினால் கிட்டும் அடிப்படிக்கும் மேலான வசதிகள் ; போர் அல்லது பெரிய வன்முறைகள் இல்லாத சமூகம். இதெல்லாம் கிடைத்ததற்கான நன்றி உணர்வு நம்மிடம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த புத்தகம். இவ்வனைத்தும் பெற்றதற்காக நாம் என்ன திருப்பி கொடுக்க போகிறோம்.

Leave a comment