ஏன் புராணங்கள் ?

Joseph Campbell (The Power of Myth) – இந்த தொடர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புராணங்களின் மேல் இருந்த பார்வையை மாற்றி அமைக்கிறது. புராணங்களில் நமக்கு என்ன இருக்கிறது என்று பார்க்க தூண்டுகிறது. இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்கள் முன்னர், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பழங்குடிகளின் கதைகள் ஒன்று போல் இருக்கின்றன. தெய்வப்பிறவியின் புனிதமான பிறப்பு, இறப்பு, பின்பு உயிர்த்தெழுதல் என்பது அனைத்து பண்பாட்டிலும் உள்ளது.

பிரதான உணவாக மனிதனுக்கு அன்று இருந்த விலங்குகள். அவன் உயிரை எடுக்கும் சக்தியாக அந்த மிருகமே ஆகிறது; யமனின் எருமை வடிவம் போல. மத குருக்கள் மக்களை வழி நடத்துபவர்களாக, தெய்வ சக்தி கொண்டு ஆடுபவர்களாக இருக்கிறார்கள். இப்படி பல ஒற்றுமைகள் புராணக் கதைகளில் உள்ளன. இது எப்படி சாத்தியம் என்று இன்றைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது. மனிதனின் எண்ணம் ஒன்று போல் செயல்படுகிறதா? தன்னை, பிரபஞ்ச சக்தியை தேடிச்செல்லும் பாதையா இந்தக் கதைகள்? அதை கண்டறிந்து உருவாக்கிய படைப்புகளா இவையெல்லாம் ? இல்லை அந்த முயற்சியின் பாதையில் உருவாகிய அந்த அந்த கால கட்டத்தின் கற்பனைகளா?

புராணங்கள் என்ன சொல்ல வருகின்றன நம்மிடம்? நாம் என்ன எதிர்பார்த்து அதனுள் செல்ல ? செல்லத்தான் வேண்டுமா ? நாம் பிறந்து வாழ்ந்து இறந்து முடிக்கிறோம். அதற்கு முன்னும் பின்னும் அறிய ஆவல் கொண்டிருக்கும் புத்திக்கு, ‘நான்’ என்பதை எடுத்து வெளியே வைத்து விட்டு, முற்காலத்திருக்கு சென்று பார்த்து வருதல் என வைக்கலாமா. அதை இன்றுடன் பொருத்தி பார்த்தல் தேவையற்றது. அந்த வாழ்வில் உள்சென்று பார்க்கும் போது சில வாசல்கள் திறக்கலாம். பல மூடப்படலாம்.

புராணங்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பயிலப்பட்டு உருவாகி நம் கைக்கு வந்துள்ளது. அது அக்காலத்தின் சிறந்த படைப்பாக இருந்திருக்கும். மஹாபாரத கதைகள் பல மூலைகளில் உள்ள கோவில்களில் சிற்பங்களாக வந்தடைய வைத்தது எது? பல மொழிகள், பல்லாயிரம் மைல்கள் தாண்டி.

மனிதன் இயற்கையுடன் கொண்டது அதீத பக்தி, மரியாதை. அதற்கு அவன் காணிக்கையாக தன்னையே கொடுத்தான். அந்த பக்தியின் உருவங்கள் தான் எத்தனை? காதல் என்பது எப்படி உணரப்பட்டது ? இன்றுள்ள தனிப்பட்ட காதல் எப்படி உருவானது ? இறப்பை எப்படி எதிர் நோக்கினான் மனிதன் ? முடிவு என்றா அல்லது தொடர்ச்சி என்றா ? அவனுடைய Bliss தான் என்ன. எது அவனுக்கு நிறைவை கொடுத்தது.அன்றைக்கும் இன்றைக்கும் நடுவில் என்ன உள்ளது? அன்றைய கதைகள் இன்று ஏன் முக்கியம்.

இரண்டு உலகத்திற்கும் பாதை புராணங்களா ? ஒவ்வொருவருக்கும் இந்த பாதை பல அவதானிப்புகளை கொடுக்கலாம். இந்த நம்பிக்கையுடன் மற்றுமொரு புதிய பாதையாய் பயணிக்கலாம்.

Leave a comment