Coffee!

ஆங்கிலத்தில் அழகாக சொல்ல முடிவது தமிழில் எழுத முடியவில்லை. அதனால் coffeeயை coffee என்றே சொல்லலாம். சிறு வயது முதல் குடித்துதான் என்றாலும் முதலில் அதை ஒரு பொருட்டாக மதித்து அருந்தியது அமெரிக்காவில் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த போது, அலுவலக நண்பர்கள் அறிமுகப்படுத்தியது. ஸ்டார் பக்ஸ்க்குள் சென்றால் சுண்டி இழுக்கும் மணம். கால் லிட்டர் கோப்பை வழிய கருப்பு காபியை வாங்கி அதில் சிறிதளவு பால் விட்டு, சர்க்கரை சேர்த்து குடித்தது. காலை மாலை என ஆரம்பித்தது. ஒரு வருடம் கழித்து சென்னைக்கு திரும்பிய பின் நல்ல காபியின் தேடல் தொடங்கியது. நம் தேடலில் தான் சென்று சேரும் இடம் என்பது இல்லையே. அதனால் இன்றும் தொடர்கிறது.

அப்போது சுந்தரி அம்மா என்கிற எங்கள் சமைக்கும் பாட்டி போட்டுக்கொடுத்த பில்டர் காபி. காலையில் ஏழு மணிக்கு அவர் வந்து போட்டு கொடுக்கும் வரை காத்திருந்து குடித்த காபி. காபி கூட சரியாக போட தெரியாது எனக்கு என்பது தான் உண்மை. ஆனால் நல்ல காபி போடுவதும் ஒன்றும் சுலபமில்லை. ஹாட் சிப்ஸ், சரவண பவன் காபிகளும் ருசியானவை. ஊருக்கு செல்லும் போது அம்மாவின் ப்ரு காபி பசும் பாலில்.

பிறகு வீடு மாற்றி நானே காபி போடும் நிலைமை வந்தது. ருசித்து குடித்து ரசனை கூடியதா அல்லது மூலப்பொருட்கள் மாறியதா அல்லது போடுபவர் மாறியதாலோ என்னவோ, மேலும் நல்ல காபிக்கு முன் நகர வைத்தது. ருசியின் முன்நகர்வு என்றே எடுத்துக்கொள்ளலாம். இந்த சமயத்தில் ஸ்டார் பக்ஸ் பற்றி புத்தகம் எல்லாம் படித்து, அங்கிருந்து வருபவர்களை காபி தூள் வாங்கி வர சொன்னதெல்லாம் உண்டு. கர்நாடகாவில் கிடைக்காத காபி தூளா?

முதலில் பில்டர் காபி. கோதாஸ் காபி தூளில் பில்டர் இறக்கி, பாலில் டிகாஷன் விட்டு குடித்தது. காபி குடிக்கும் முன் அதன் மணம், பிறகு ஒரு கசப்பு அதன் பின் ஒரு இனிப்பு என இருக்க வேண்டும். நமது பாக்கெட் பொடிகளில் இரண்டு பிரச்சனை, ஒன்று, சில நாட்களில் காபி மணம் முழுவதுமாக நீங்கி சிக்கரி மட்டும் வீசும். இரண்டு, சிக்கரி அதிகமாக கலந்து கருப்பாக ஒரு ஆழமான கசப்போடு இருக்கும். இது தெரிய பல வகை பொடிகளை ஆராய்ந்தாயிற்று. இதற்குள் பில்டரில் இருந்து எஸ்பிரெஸ்ஸோ மெஷின், மோக்கா பாட் என மாற்றியாயிற்று. இதற்கு நடுவில் ஐரோப்பாவில் சில மாதங்கள் இருந்து, வழக்கம் போல் அங்கேதான் தரமான காபி கிடைக்கும் என்று அவை சில மாதங்கள். மோக்கா பாட் கூட அங்கேதான் கற்றது.

2018ல் சிக்மகளூர் சென்ற போதுதான் கண் திறந்தது. அங்கே காபி பிரபலம் என்று தெரிந்து ஒரு இடத்தில் காபி குடித்தோம். அந்த சமயத்தில் அலர்ஜி பிரச்சனை காரணமாக வாசனை இல்லாமல் குடித்தேன். அதுகூட நன்றாக இருந்ததாக ஞாபகம். அல்லது ஜெய் கொடுத்த பீடிகையாக கூட இருக்கலாம். அதுவும் நமக்கு தெரியாது என்றால் கேட்கவா வேண்டும். அங்கு பாபா புடான்கிரி என்கிற மலை உள்ளது. பாபா பூடான் என்பவர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு காபி கொட்டையை ஏமன் நாட்டில் இருந்து கடத்தி கொடுண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்படி வந்தது தான் இந்தியாவிற்குள் காபி தோட்டம். இங்கிருந்து கர்நாடகாவின் பல மலைகளிலும், ஏற்காட்டிலும் இன்னும் பல இடங்களுக்கும் இந்தியா முழுக்க சென்றுள்ளன. சிக்மகளூரில் காபி மியூசியம் உள்ளது. காபி பயிரிடுவதில் இருந்து, பராமரிப்பது, அறுவடை செய்வது, வறுத்து பொடிப்பது என இன்னும் கொஞ்சம் காபி அறிவு கிட்டியது.

அங்கு நூறு வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒரு காபி நிறுவனத்தின் கடைக்கு சென்று தூள் வாங்கினோம். அவர்களிடம் பேசியதில், அது அவர்களது பரம்பரை தொழில், அங்கிருந்தவர்கள் பலர் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இளைய தலைமுறை ஆன்லைன் கொண்டு வந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவின் 90% காபி தேவையை சிக்மகளூர் தான் பூர்த்தி செய்கிறது என்றார்.

Levista , Madikeri

கடந்த ஐந்து வருடங்களாக அங்கிருந்து தான் காபி தூள் வருகிறது. சிக்கரி இல்லாமல் சுத்தமான காபி தூள் வாங்கி, சிறிதளவு சிக்கரி கலந்து குடித்தால் நல்ல பில்டர் காபி. தூள் வாங்கி சேமிக்கும் போது அதன் மணம் போய்விடுகிறது. அதனால் தூளாக வாங்காமல் கொட்டையாக வாங்கி, சிறிய கையில் அரைக்கும் மெஷின் கொண்டு பிரெஞ்சு பிரஸில் காபி போடும் வழக்கம் வந்து விட்டது. சிக்கரி இல்லாமல், மணம் சிறிதும் குறையாமல் வரும் காபிக்கு நிகர் ஏது!

இதற்கு நடுவில் மடிக்கேரி, சக்லேஷ்பூர், கும்பகோணம் என எல்லா இடங்களிலும் நல்ல காபியை குடித்து பாத்தாயிற்று. கைக்கெட்டும் தூரத்தில் தான் தரமும் மணமும் இருக்கிறது, இதற்கு கடல் ஏன் தாண்ட ?

அப்படியே போனால் எப்படி? மருத்துவர் பாலை அறவே நிறுத்தச்சொல்லி, கருப்பு காபிக்கு மாறி ஆயிற்று. சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு. இதுவும் நல்ல சுவை தான். சுவை என்பதே பழக்கம் தானே. தினம் மூன்று காபி குடித்தால் கூட பால் சேர்க்கும் குற்ற உணர்வில்லாமல் குடிக்க முடிகிறது. இனிப்பை தவிர்த்தால் இன்னும் நல்லது. பார்க்கலாம்.

காபி வீட்டில் பிடித்தமான இடத்தில் அமர்ந்து பொறுமையாக அருந்துவது அன்றாடத்தின் இனிமைகளில் ஒன்று !

Leave a comment