வில்

குழந்தைகள் – கலீல் ஜிப்ரான்

மகளுக்கு எட்டு வயதாக போகிறது. கலீல் ஜிப்ரானின் கவிதை படித்து பல வருடங்கள் இருக்கும். ஆனால் இந்த வருடத்தில்தான் பல முறை ஞாபகம் வருகிறது. மகள் வளர்கிறாள், முழுவதுமாய் அணைப்பில் இருந்து சிறிது சிறிதாக வெளியே செல்வது தெரிகிறது. சில இடங்களில் அருகில் நின்றும், சில இடங்களில் எதிரே நின்றும், தெளிவாக தோள்கொடுத்தும் பேசுகிறாள்.

சில நாட்களுக்கு முன் நாங்கள் இருவரும் கடைக்கு செல்லும் வழியில் நடந்த உரையாடல். நான் அதற்கு முன் சென்ற பயணத்தில் என்ன என்ன உணவு சாப்பிட்டேன் என்று பேசிக்கொண்டு போனோம். அதன் தொடர்ச்சியாக அவள்

“அம்மா, என் பிரெண்டுக்கு விட்டமின் டி கம்மியா இருக்குன்னு அவங்க அம்மா ஒரு பிளாக் கலர் மருந்தை பிரட்ல தடவி தராங்க”

நாம்தான் “ஹெல்த் கான்சியஸ்” ஆச்சே, உடனே “இல்லடா அது நச்சுரலா சன்ல இருந்து கிடைக்குதே, மருந்தெல்லாம் உடம்புக்கு கெடுதல்”

“அதனால் தான்மா அவ நிறைய அவுட் டோர் விளையாட்டுல சேர்த்தி விட்டு இருக்காங்க. அவ சிலம்பம் ரன்னிங் எல்லாம் போறா”

நான் அதன் பிறகு அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்து விட்டேன். என் வகுப்பை நிறுத்தி கொண்டு. பல சமயங்களில் இந்த வகுப்பு தோணியை உணர்ந்து நிறுத்தி கொள்ள வேண்டி உள்ளது.

இன்றைய சூழல், நாமிருக்கும் இடம், அவள் போகும் பள்ளி, படிக்கும் பார்க்கும் விஷயங்கள் என பல காரணிகள் அவர்கள் எண்ணத்தை செதுக்குகின்றன.

அவள் விளையாட்டை கவனித்து சில பிழைகளை சுட்டி காண்பிப்பது வழக்கமாக வைத்திருந்தேன். அதுவும் அவள் கேட்கும் மனநிலையில் இருக்கும் போது. அப்படி இரு வாரங்கள் முன்

“ஏன்டா பந்து எதிர்பக்கம் அடிக்க அரம்பிக்கும் போதே நீ ஓட ஆரம்பிக்கலாம்ல.. இப்போ நீ பந்து பாதிக்கு மேல் வந்த பிறகு ஓட ஆரம்பிக்கிற. அதுக்குள்ள கீழே விழுந்துடுது”

“அம்மா, அப்போ நீ போய் விளையாடு பாக்கலாம்”

நியாம்தான் என்று ஒரு நொடி தோன்றினாலும், சும்மா இராமல் நாலு திட்டு நாலு அட்வைஸ் கொடுத்தேன். அடுத்த நாள் அதே அவளது கோச் கூறினார். அப்படி ஒரு சிரத்தையுடன் கவனித்து திருத்தி கொள்கிறாள்.

சென்ற வாரம் அவளது தோழியின் வீட்டில் இருந்து அழைத்து வர சென்றிருந்தேன். அன்றைய அலைச்சல் சலிப்புடன் இந்த வேலையும் சேர்ந்து கொள்ளவே அலுப்பில் இருந்தேன்

“அம்மா, இன்னும் 20 மினிட்ஸ் கழிச்சு வந்து கூட்டிட்டு போறியா ?”

“இல்ல, வா கிளம்பலாம்”

எந்த பதிலும் சொல்லாமல் வந்து ஏறிக்கொண்டாள். இதுவே ஒரு வருடம் முன்பு அதே இடத்தில் பெரிய போராட்டம் நடக்கும். இப்போதும் வண்டில் எறியபின் எங்கள் இருவருக்கும் வாக்குவாதம்

“ஏம்மா அவங்கயெல்லாம் இன்னும் விளையாடறாங்க”

“நான் தான் 8 மணிக்குக்குன்னு சொல்லித்தானே விட்டேன்”

“இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வந்தா என்ன ஆய்டும் உனக்கு. ரொம்ப மோசம்” என அவள் ஆரம்பிக்க .. நான் எனது சலிப்பை கொட்ட… அவள் தெளிவாக

“அம்மா, அதுதான் நீ முடியாது சொன்ன உடனே வண்டில ஏறிட்டேனே.. அப்புறம் ஏன் இப்படி திட்ற ..”

சரிதான். எதிர்பார்ப்பு அவளிடம் ஜாஸ்தி ஆகிக்கொண்டே போவதை உணர்ந்தேன். என் நாளை அவள் அறியாத போது எப்படி அவளுக்கு புரியும். அவள் நாட்களும் வாழ்க்கையும் வேறு.

இந்த கவிதை என் மகளுக்கும் மட்டுமல்ல, நான் இறுக்கப்பிடித்திருக்கும் மற்றவைக்கும் வந்து நிற்கிறது. வீட்டை சுற்றி உள்ள மரம் செடிகளின் மேல் பெரும் பிரியம் உண்டு. அதற்கு பல எதிரிகளும் உண்டு. ஒவ்வொரு முறை அது வெட்ட படும் போதும் நான் சண்டையிடுவதும் கோபப்படுவதும் உண்டு.

இந்த முறையும் நடந்த போது, ஒரு கோபம் இயலாமை என உணர்ச்சிகள் போட்டிபோட மாடியில் இருந்து மரங்களை நோக்கினேன். ஒரு நொடி மலைத்து போனேன். வெட்ட வெட்ட அம்மரங்கள் பெருகித் தழைக்கின்றன. கொய்யா முன்பைவிட இரட்டிப்பு காய்கள் ஒரு கொத்தில். சப்போட்டா கீழேதானே வெட்டுவாய் என மேலேறி அடர்ந்து விரிகிறது. ஏசி யுனிட் வைத்திருக்கும் இடத்தில் மண்ணே இல்லாமல் வெறும் குப்பையில் ஒரு தூதுவளை, அழகிய ஊதா பூவுடன். சட்டென்று தோன்றியது, இயற்கையின் முன்னால் அற்ப உயிர்களாகிய நாம் என்ன செய்து விட முடியும் ?

வில்லாளி முடிவிலியில் குறி வைத்து
தனது வல்லமையினால் உன்னை வளைத்து,
அவனது அம்பை தொலைதூரத்துக்கு செலுத்துகிறான்

நீ எய்தவனின் கையால் வளைவது நிறைவானதாக இருக்கட்டும்
அவனும் கூட, பறக்கும் அம்பை நேசிப்பது போல திடமான வில்லையும் நேசிப்பவன்.

Leave a comment