சென்னை மாரத்தான் 10km

ஓடுவது என்பது சில வருடங்களாக விட்டு விட்டு நிகழும் முயற்சி. நிறுத்துவதற்கு பல காரணங்கள் வந்து நிறுத்தி விடும். மீண்டும் தொடங்குவதற்கு சில காரணங்கள் வந்து எழுப்பி விடும். இதுவரை ஒரு ஏழு எட்டு 10 கிமீ ஓடியாயிற்று. ஓடுவது என்றால் முழுதூரமும் அல்ல. முக்கால்வாசிக்கும் மேல் ஓடி ஆங்காங்கே நடந்து என்று. கடைசியாய் ஓடியது கொரோனாவுக்கு முன்.

ஏன் ஓடுகிறேன் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நடப்பது போதாதா ?நடப்பது பிடித்த ஒன்று. என்ன தூரம் நடந்தாலும் சலிப்பதில்லை. உடலும் அதற்கு ஏற்றார் போல் தான். ஒரு சில வாரங்கள் ஏதாவது உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் சதை பிடிக்க ஆரம்பித்து விடும். அதனாலோ என்னவோ தினசரி நடை என்பது கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

எட்டு மணிநேரம் உட்கார்ந்து செய்யும் வேலைக்கும் உடலின் அமைப்புக்கும் அது போதாது என்று அடிக்கடி நினைத்து பல சாகசங்களை முயற்சி செய்தது உண்டு. நீச்சல், சைக்கிள், யோகா என அவ்வப்போது சில மாதங்கள் செய்து நின்று பின்பு நடையுடன் அடங்கி விடும். டாய் சி (Tai Chi), ரோலர் ஸ்கேட்டிங் கூட கற்க முயற்சித்தது உண்டு. உள்ளிருக்கும் குரல் இதுபோல் ஏதாவது தொந்தரவு செய்து கொண்டே இருக்க இந்த வருடம் 42 கிமீ ஒடித்தான் பார்க்கலாம் என்று இறங்கி உள்ளது.

10 கிமீ என்பது நடந்து கூட முடித்து விடலாம். அதற்கு மேல் 21, 42 என்று போக தொடர்ந்து பயிச்சி தேவை.

தொடக்கமாக சென்ற வாரம் 10 கிமீ சென்னை மாரத்தான் ஓடினேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுத்த முடிவாதலால் பயிற்சிக்கு நேரம் குறைவு. இதில் மிக்ஜாம் வந்து போனதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும் நேரம் எடுத்து கொண்டது. இரண்டு வாரத்தில் விட்டு விட்டு ஓடி, 3 கிமீ நிற்காமல் ஓடும் அளவுக்கு மட்டுமே பயிற்சி செய்ய முடிந்தது. வேகம் வெகுவாக குறைந்திருக்கிறது. வேகமாக நடந்தால் இதை விட சீக்கிரம் கடக்கும் அளவுக்கு. இந்த முறை ஒரே குறிக்கோள் தான். முடிந்த வரை ஓடி மட்டுமே முடிக்க வேண்டும் என்று. அது எவ்வளவு நேரம் ஆனாலும்.

சில வருடங்கள் கழித்து ஓடும் ஆர்வத்தில் சரியான தூக்கமில்லை. சென்னையில் நடக்கும் மிகப்பெரிய மாரத்தான். அண்ணா சாலையில் இருந்து கூட்டம் அலை மோதியது. ஆட்டோ பிடித்து ஐந்தரை மணிக்கு நேப்பியர் பாலம் வந்தடைந்தேன். இது ஒரு கொண்டாட்டம் தான். திருவிழா. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து ஸ்டார்ட் பாயிண்ட் வந்து சேர்ந்தேன். ஐந்தே முக்காலுக்கு வான வேடிக்கையுடன் துவங்கியது.

முதல் நூறு மீட்டர் கூட்ட நெரிசலில் நடந்து செல்ல வேண்டி இருந்தது. அதன் பின் ஓட ஆரம்பித்தேன். ஜாகிங்தான்.

சிறிது தூரம் கால் பிடித்தது போல இருந்தது பின்பு இயல்பு நிலையில் ஓட முடிந்தது. ஓடும் போது பல சமயம் உள்நோக்கிய உரையாடல் நடந்து கொண்டிருக்கும். இந்த முறை அதை கவனிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். செய்யும் செயலை கேள்வி எழுப்பும் புத்திதான்.

மூச்சு வாங்கும் போது அல்லது ஓடவே முடியாத நிலையில் மட்டும் நடக்கலாம் என்றும் நினைத்து கொண்டேன். அதிகாலையில் சிறு தூறல் போட்டு இருந்தது. மேகம் மூட்டத்துடன் மென்மையான காற்று வீசியது. உற்சாகமாக ஓட முடிந்தது. இதில் நடப்பவர்களே மிகுதியாக இருப்பதானால் ஓடுவதில் இரண்டு பக்கமும் உண்டு. நாம் ஓடுகிறோம் என்ற அல்ப சந்தோஷம் உண்டு. நடுநடுவே புகுந்து செல்ல வேண்டியதும் உண்டு. பலர் நடந்து என்னை தாண்டியும் சென்றனர். இருக்கட்டும் நமது குறிக்கோள் நடக்காமல் ஓடுவது மட்டும் தானே.

நடுநடுவே கும்பலாக நடப்பவர்களின் உரையாடல்கள் காதில் விழும். அலுவலக அரட்டைகள், நண்பர்கள் கலாய்ப்பு, வீட்டு பிரச்சனை உட்பட.மூச்சு வாங்காமல் சீராக இரண்டு கிமீ ஓடியாயிற்று. பயிற்சி செய்த 3 கிமீ வரப்போகிறது. அதற்கு மேல் ஓட முடியுமா. சரி பார்க்கலாம்.

மூன்று கிலோமீட்டரில் தண்ணீர் ஸ்டேஷன் வந்தது. தாகம் இல்லை, ஒரு பாட்டிலை மட்டும் வாங்கி கொண்டு ஓடினேன். சிறிது தூரத்தில் அது தொந்தரவு செய்யவே ஒருவரிடம் கொடுத்து விட்டு தொடர்ந்தேன். இதற்காக சில நொடிகள் நடந்ததை தவிர இன்னும் நிற்கவில்லை.

மொபைலை எடுத்து வேகத்தை பார்த்தேன். 9 நிமிடங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு எடுத்திருந்தேன். பயிற்சியின் போது 11 நிமிடங்கள் எடுத்தது. கடற்கரை முடிந்து நகரின் சாலையில் சாலை குறுகலாக இருந்தது. இதில் நடப்பர்வகளை வழி விடச்சொல்லி கொண்டே செல்ல வேண்டி இருந்தது. ஒரு சில இடத்தில் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததனால் மக்கள் கடுப்புடன் ஹார்ன் அடித்து கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டரை நெருங்கும் போது தண்ணீர் ஸ்டேஷனில் சிறிது க்ளுகோஸ் குடித்தேன். சிலமீட்டர் இதற்காக நடந்து பின்பு ஓட ஆரம்பித்தேன். பாதி தூரம் கடந்தும் உடல் சோர்வடைவது தெரிந்தது. உடலுக்கும் புத்திக்குமான வாக்குவாதம் பெரிதாக இல்லை. புத்தியே மேலோங்கி முடியும் வரை ஓடலாம் என தொடர்ந்தது. 8 கிமீ கடந்தாயிற்று. அடையார் பாலம் ஏற்றத்தில் ஓடுவது சிரமமாக இருந்ததால் அதை நடந்து ஏறி இறங்கும் போது மீண்டும் ஓடுவதை தொடர்ந்தேன். இதற்கு மேல் நிற்க விடமால் ஓட சொல்லி கொண்டு வழி நெடுக உற்சாக படுத்தும் கூட்டம்.

ஒண்ணேமுக்கால் மணி நேரம் எடுத்திருந்தேன் முடிக்க. சிறிது நடந்திருந்தாலும் 9 கிமீ மேல் தொடர்ந்து ஓடிய நாள். நிறைவாக 10 கிமீ முடிந்தது.

மற்றுமொரு நாளை எதிர்பார்த்து. இன்னும் தூரமாக வேகமாக.

Leave a comment